மதுரை : தமிழகத்தில் குழப்பமான உத்தரவுகள் சரியான நேரத்தில்
எடுக்கப்படாத முடிவுகளால் மாணவர்களை குழப்பி இலக்கின்றி பயணிக்கும் பரிதாப
நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை தள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் பொதுத்
தேர்வுகளை நடத்துவதில் இருந்து தேர்வு முடிவுகளை அறிவிப்பது வரை பல்வேறு
குழப்ப உத்தரவுகள் மாணவர்கள் பெற்றோர் மனநிலையை பாதித்தன. குறிப்பாக
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா திடீரென வெளியான பிளஸ் 2
தேர்ச்சி முடிவு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் வழங்கப்பட்ட
நடைமுறை போன்றவை சரியான திட்டமிடல் இன்றி நடந்தது.
தெளிவான பாதையில் சி.பி.எஸ்.இ.
பிளஸ்
1 பிளஸ் 2வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுக்கு இணைய
வழியில் எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்று நேற்று முன் தினம் வரை தமிழக
கல்வித்துறை வெளியிடவில்லை. ஆனால் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிந்து 20
நாட்களில் வெளியிட்டது. தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர் 'கொரோனாவை
முன்னிட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்'என
நீதிமன்றத்தை அணுகியும் அதை நிராகரித்து அறிவிப்பை வெளியிட்டது.
தமிழகத்தில்
ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை
நடைமுறைப்படுத்திய தமிழக கல்வித்துறைஅதற்கான கால அட்டவணை வெளியிட்டு
தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துகிறது.ஆனால் கொரோனாவால் பாடத் திட்டத்தை
குறைப்பதற்காக 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்து 40
நாட்கள் ஆன பின்னரும் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என இதுவரை தகவல்
இல்லை.ஆனால் சி.பி.எஸ்.இ. 9 10 பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீக்கப்பட்ட
பாடங்கள் எவை என 20 நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டது.இப்படி
இலக்கின்றி பயணிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை குறித்து பல உதாரணங்களை
கூறலாம்.
இதுகுறித்து அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்க பொதுச்
செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: துணைத் தேர்வு அறிவிக்காததால் கல்லுாரி
சேர்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் என்ன என்பது
தெரியாமலே மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளனர். அரசு பள்ளிகளில்
மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிறப்பு
மாற்றுச் சான்று இன்றி அட்மிஷன் நடத்த கல்வி அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.
இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத பல மாணவர்கள் அரசு
பள்ளிகளில் சேர்கின்றர். இதை அரசு நெறிப்படுத்த வேண்டும். அதேநேரம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஒருபோதும் விதிகள் தளர்த்தப்படுவதில்லை. பிறப்பு
சான்று மாற்றுச் சான்று உள்ளிட்டவை இன்றி சேர்க்கை அனுமதிப்பதில்லை.பள்ளிக்
கல்வியில் ஏற்கனவே செயலாளர் இருக்கும்போது கமிஷனர் பணியிடம்
உருவாக்கப்பட்டு அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
இலக்கை நோக்கி பயணிக்கும் வகையில் கல்வித்துறையை சீரமைக்க தமிழக முதல்வர்
பழனிசாமி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்