அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: செங்கோட்டையன்

 

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  10,12 மட்டுமல்ல 8 மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

அரசு பள்ளிகளில் எதற்காகவும் மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது எனவும், அவ்வாறு வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.  பெண்ணாடத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் வழங்கவும், மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று குறைந்தவுடன்தான் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய உயர்கல்வித்துறையுடன் இணைந்து குழு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.