'நீட்' தேர்வு:'ஹால் டிக்கெட்' வெளியீடு


 சென்னை; 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வுக்கு, பல மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, நீட் தேர்வை நடத்தி வருகிறது.இந்த ஆண்டுக்கான, நீட் தேர்வு மே மாதம் நடத்தப்பட இருந்தது. கொரோனா காரணமாக, செப்., 13க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நேற்று வெளியிடப்பட்டது.நாடு முழுதும், 4,800 மையங்களில் தேர்வை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுத, 15.97 லட்சம் மாணவர்களும், ஜே.இ.இ., தேர்வை எழுத, 9.53 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.