இனி போலியான செய்திகளைப் பரப்ப முடியாது... வாட்ஸ்அப்பில் வந்தாச்சு புது அப்டேட்...!

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பஉலகில் செய்திகளைப் பகிர்வதற்கும், தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் பல செயலிகள் உள்ளன. அவற்றுள் பரவலான மக்களால் பயன்படுத்தக்கூடிய செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மற்ற செயலிகளை விட இதன் வேகமும், எளிமையாகக் கையாளும் முறையும் சாதாரண மக்கள் பயன்பாடு முதல் அலுவலகப்பயன்பாடு வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இதனை மாற்றியிருக்கிறது.
அதே நேரத்தில் இதில் பரவும் பல்வேறு வகைப்பட்ட போலியான செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த வழிகளும் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவாக இருந்து வந்தது. அக்குறையைப் போக்க வாட்ஸ்அப் நிறுவனம் பல அப்டேட்ஸ்களை அடுத்தடுத்து வெளியிட்டது. செய்திகளை மற்றவர்களுக்கு பகிரும் போது 'இது பகிரப்பட்ட செய்தி' என்ற தகவலை 
அறியும்படியான மாறுதல்கள், ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டும் தான் செய்தியைப் பகிர முடியும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதித்தும் நம்பகத்தன்மையற்ற செய்திகள் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அசத்தலான அப்டேட்ஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு செய்தி மற்றவர்களுக்கு பகிரும் போது, அந்தச் செய்திக்கு அருகிலேயே 'Search the Web' என்று ஒரு வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி அந்தச் செய்தியை நேரடியாக தேடுபொறி(BROWSER) உடன் இணைத்து அது உண்மையான செய்தியா இல்லையா என்று உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதி முதல் கட்டமாக பிரேசில், இத்தாலி, மெக்ஸ்ஸிகோ, அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வெளியாகிறது. இந்தியாவில் இந்த வசதி எப்போது முதல் பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.