பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க உத்தரவு

 சென்னை; 'மத்திய அரசின் ஊட்டச்சத்து நெறிமுறைகளை பின்பற்றி, தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்படும் வரை, உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்' என, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டச் செயலர் மதுமதி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெறும், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மே மாதத்திற்கான அரிசி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை வழங்க, ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காலத்தில், உணவுப் பொருட்கள் வழங்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், ஆணையிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஊட்டச் சத்து அளவுகளின்படி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, நாள்தோறும், 450 கிலோ கலோரி சத்தும், 12 கிராம் புரதமும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 700 கிலோ கலோரி சத்தும், 20 கிராம் புரதமும் வழங்க வேண்டும் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 2020 - 21ம் ஆண்டில், 220 நாட்கள் மதிய உணவு வழங்குவதற்கு, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், அரிசி மற்றும் பருப்பில் உள்ள கலோரி மற்றும் புரதச் சத்து, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஊட்டச் சத்து அளவுகளை பூர்த்தி செய்கிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, கலோரி மற்றும் புரதச் சத்து சற்று குறைவாக உள்ளது.

எனவே, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பருப்புடன், நாள்தோறும் கூடுதலாக, 15 கிராம் புரதச் சத்து வழங்கப்பட்டால், மத்திய அரசின் ஊட்டச் சத்து அளவுகோல்களின்படி, கலோரி மற்றும் புரதச் சத்து கிடைக்கும். எனவே, ஊரடங்கு காலம் முதல், பள்ளிகள் திறந்து செயல்படும் வரை, அரிசி மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை, தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, சமூக நலத் துறை ஆணையர் கேட்டுள்ளார்.அதன்படி, மத்திய அரசின் ஊட்டச் சத்து நெறிமுறைகளை பின்பற்றும் வகையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் அளவிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அரிசியுடன் கூடுதலாக, 15 கிராம் பருப்பு வழங்கவும், சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் வரை, உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். இதற்காக, தேவை அடிப்படையில், அரிசி மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை, வாணிப கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதை, சமூக நல ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.