தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர வலியுறுத்தல்

சென்னை; எழுதாத தேர்வுக்கு, கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு
கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுத்தால், அது கல்வி சார்ந்த பிற செலவுகளுக்கு பயன்படும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து, அவரது அறிக்கை: 

தமிழகத்தில், மருத்துவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடப்பு செமஸ்டர் தேர்வுகளுக்கு, வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை, உடனே பல்கலையில் செலுத்தும்படி, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுத்தால், அது கல்வி சார்ந்த பிற செலவுகளுக்கு பயன்படும். எனவே, அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை, அவர்களிடமே திருப்பி வழங்க, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ராமதாசின் டுவிட்டர் பதிவு: தீரன் சின்னமலையின் வீர வரலாறு, மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அவரது வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், பாடப் புத்தகத்தில் சேர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுதும், அனைத்து மாநில மொழி பாடங்களிலும், தீரன் சின்னமலையின் வரலாற்றை சேர்க்க வேண்டும். அவரது நினைவு நாளில், அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.