சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்

latest tamil newsசென்னை:சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதைத்தொடர்ந்து, இந்த பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க 2 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 2 பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர் பணிக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்த தலா 3 பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் அளித்தது.அந்த பட்டியலை பரிசீலித்த கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார். இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். இவர்களது நியமனம் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.