மதிப்பெண் சான்றிதழ் பிழைகள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 

சென்னை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பிழைகள் இருந்தால், திருத்தம் செய்யுமாறு, தலைமை ஆசிரியர்களை, அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான அவகாசமும், பெயர்களை திருத்தும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

ஆனால், தேர்வு நடத்தி முடிவுகள் வந்த பின்பும், பெயர் திருத்தம் கோரி, விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பெயர்களில் திருத்தம் இருந்தால், அதை மேற்கொள்ள இறுதியாக, ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழில், யாருக்கு என்ன திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதன்பின், வரும், 24ம் தேதி முதல், 29 வரையில், அரசு தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்களின் பெயர், ஆங்கிலம் மற்றும் தமிழில், இனிஷியல், பிறந்த தேதி, புகைப்படம், கற்பித்தல் மொழி, முதல் மொழி பாடம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால், பதிவு செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களின், பெற்றோர் பெயரில் திருத்தம் இருந்தாலும், இணையதளத்தில் பதிவேற்றலாம். மாணவர்களின் நலன் கருதி, பிழைகள் இல்லாத மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக, இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இதை பயன்படுத்தாமல், சான்றிதழ் வழங்கப்பட்ட பின், திருத்தம் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.