ஓய்வூதியம் எடுக்கவில்லையா? இறந்ததாக கருத அரசு முடிவு!

 

சென்னை: 'ஓய்வூதிய கணக்கில், ஆறு மாதம் பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை எனில், வரவு வைக்கப்பட்ட ஓய்வூதிய தொகையை திருப்பி அனுப்புங்கள்' என, வங்கிகளுக்கு, தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.


அரசு உத்தரவு

அரசு துறைகளில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை, ஆண்டுதோறும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில், ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பு ஆண்டு உயிர்வாழ் சான்று வழங்க வேண்டாம்; அடுத்த ஆண்டு வழங்கினால் போதும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆறு மாதமாக வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடைபெறவில்லை எனில், வரவு வைக்கப்பட்ட ஓய்வூதிய தொகையை திருப்பி அளிக்க, கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக, ஓய்வூதியதாரர்கள், உயிர்வாழ் சான்றிதழை நடப்பு ஆண்டு வழங்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை கமிஷனர் சத்தியமூர்த்தி, ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், 'ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய தொகை வரவு வைக்கப்பட்டு, ஆறு மாதமாக செயல்பாட்டில் இல்லாத, வங்கி கணக்கு விபரங்களை, கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். திரும்ப அனுப்ப வேண்டும்'அவ்வாறு, ஆறு மாதம் பணம் எடுக்கவில்லை எனில், அந்த ஓய்வூதியதாரர் இறந்ததாக கருதி, அந்த கணக்கிற்கு வரவு வைப்பது நிறுத்தப்படும்.

'மேலும், ஏற்கனவே வரவு வைக்கப்பட்டு, எடுக்காத ஓய்வூதிய தொகையை, அரசு வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்ப வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து, தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்