கால்நடை மருத்துவ படிப்பு இன்று முதல் விண்ணப்பம்

 சென்னை; தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, இன்று முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., படிப்புகள் உள்ளன.

மேலும், உணவு கோழியின் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.நடப்பு, 2020 - 21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.'பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.