இன்ஜி., கவுன்சிலிங் நாளை 'ரேண்டம்' எண்

 சென்னை; இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நாளை, 'ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிந்தது.விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் பிரதிகளை, ஆன்லைனில் பதிவேற்றும் நடவடிக்கை, ஜூலை, 31ல் துவங்கியது; இன்று கடைசி நாளாகும். இதுவரை, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; 1.30 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.இதையடுத்து, அசல் சான்றிதழ்களை பதிவேற்றி, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது.

ஒரே மதிப்பெண்ணுடன் வரும் மாணவர்களுக்கு, தரவரிசையில் முன்னுரிமையை முடிவு செய்வதற்கு, இந்த ரேண்டம் எண் பயன்படுத்தப்படும்.இதை தொடர்ந்து, வரும், 24ம் தேதி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. செப்., 1க்குள் இந்த பணிகள் முடியும் என, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.