"பள்ளி திறந்தாலும் பிள்ளைகளை அனுப்பமாட்டோம்"- 62% பெற்றோர்கள் தயாரில்லை என ஆய்வில் தகவல்

 

இந்தியாவில் கொரோனா காரணமாக கடைப்பிடிக்கப்படும் தொடர் ஊரடங்குகளால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 1ம் தேதியன்று பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், 62 சதவீத பெற்றோர்கள் செப்டம்பர் 1ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். 23 சதவீத பெற்றோர்கள் அனுப்புவோம் என்றும் 15 சதவீதம் முடிவெடிக்கவில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

அண்மையில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டாலும் அடுத்த 60 நாட்களில் 6 சதவீதம் மக்கள் மல்டிப்ளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்குச் செல்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த 60 நாட்களில் மெட்ரோ மற்றும் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வோம் என 36 சதவீத மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

பெரும்பாலான பெற்றோர், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு முடிவெடுக்கக்கூடாது என்று விரும்புகின்றனர். பதிலாக ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி, வானொலி உள்பட வேறு வழிகளில் கல்வி கற்பிக்க அரசு முயற்சி செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.