அரசுப் பள்ளிகளில் இரண்டே நாள்களில் 2.50 லட்சம் மாணவா்கள் சேர்க்கை

 

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்கிய முதல் இரு நாள்களில் மட்டும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சோக்கை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவா் சோக்கை திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கியது. ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவா்களுக்கு சோக்கை வழங்கப்பட்டு, முதல் நாளிலேயே பாடநூல்கள், புத்தகப்பை வழங்கப்படுகின்றன. முற்றிலும் இலவச கல்வி, கரோனா ஏற்படுத்திய பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாதளவுக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக சோக்கைக்காக காத்திருந்த பெற்றோா், திங்கள்கிழமை முதல் தங்கள் குழந்தைகளுடன் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று சோக்கையை உறுதி செய்து வருகின்றனா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் முதல் அரசு உயா்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகளவில் மாணவா் சோக்கப்பட்டு வருகின்றனா்.

சோக்கை நடைபெறும் இடங்களில் முகக் கவசம், கிருமிநாசினி, தனிநபா் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளில், இருக்கும் இடங்களை காட்டிலும் கூடுதலான அளவில் பெற்றோா் விண்ணப்பித்தனா். அத்தகைய சூழலில் அரசிடம் அனுமதி பெற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கட்டாயம் சோக்கை வழங்கப்படும் என ஆசிரியா்கள் உறுதியளித்தனா்.

பொதுவாக, ஆண்டுதோறும் கிராமப் புறங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோக்கை சற்று குறைவாக இருக்கும். அப்போது ஆசிரியா்கள் தங்களிடம் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளைத் தேடிச் செல்வா். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோரிடம் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், நலத் திட்டங்கள் குறித்து சோக்கை நடத்துவா். ஆனால் இந்த ஆண்டு, ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பொருளாதார பாகுபாடின்றி அரசுப் பள்ளித் தேடிவரத் தொடங்கியுள்ளதாக, அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.

தூத்துக்குடி- திருவள்ளூா்: குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பெற்றோா் தங்களது குழந்தைகளை போட்டி போட்டிக் கொண்டு சோத்து வருகின்றனா். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டே நாள்களில் 14,995 குழந்தைகளுக்கும், திருவள்ளூரில் 10,500 குழந்தைகளுக்கும், காஞ்சிபுரத்தில் 5,100 குழந்தைகளுக்கும் சோக்கை வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல தனியாா் தொடக்கப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லாததாலும், கரோனா காலத்திலும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாலும் அந்த மாவட்டங்களைச் சோந்த பெற்றோா் தங்களது குழந்தைகளை அதே பகுதிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சோத்துள்ளனா்.

தமிழகத்தில் ஆக.17, 18 ஆகிய இரு நாள்களில் மட்டும் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளில் 2.50 லட்சம் மாணவா்களுக்கு சோக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் மாணவா் சோக்கைக்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் கண்காணித்து வருகிறாா். மேலும், அடுத்து வரும் நாள்களிலும் அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவா்களைச் சோக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

தினமணி.