செப்., 17ல் இன்ஜி., தரவரிசை பட்டியல் 'ரேண்டம்' எண் ஒதுக்கீடு நிறைவு


 சென்னை; இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண் ஒதுக்கீடு நிறைவு பெற்றது. அவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், செப்., 17ம் தேதி வெளியிடப்படும் என, உயர் கல்வி துறை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறை வழியாக, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிந்தது. அசல் சான்றிதழ்களின் ஒளிபிரதிகளை, ஆன்லைனில் பதிவேற்றும் வசதி, ஜூலை, 31ல் துவங்கி, ஆக., 24ல் முடிந்தது.

இந்நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் என்ற, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், உயர் கல்வி முதன்மை செயலர் அபூர்வா மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 1.31 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 1.14 லட்சம் பேர் மட்டும் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்களுக்கு, செப்., 17ம் தேதி, மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. அப்போது, ரேண்டம் எண் எனப்படும், சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட உள்ளது.பயன்படுத்துவது எப்படி?இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அவர்களின் பிளஸ் 2 தேர்வில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய, முக்கிய பாட மதிப்பெண்களை கூட்டி, அதிகம் பெற்றவர்கள், தரவரிசை பட்டியலில் முன்னிலை பெறுவர். மதிப்பெண் குறைய குறைய பின்வரிசைக்கு தள்ளப்படுவர்.இதன்படி, தரவரிசை பட்டியல் உருவாக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஒரே மதிப்பெண் பெற்றால், அவர்களுக்கான தரவரிசையை நிர்ணயிக்க, சில விதிகள் பின்பற்றப்படுகின்றன.அதன்படி, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்படும்.

அதில், சில மாணவர்கள், மூன்று பாடங்களில் சம மதிப்பெண் பெற்றிருந்தால், உயிரியியல், கணினி அறிவியல் பாடங்களில், அவர்கள் பெற்ற மதிப்பெண், கணக்கில் எடுக்கப்படும்.அதிலும், சம மதிப்பெண் எடுத்துள்ளனர் என்றால், மாணவர்களின் பிறந்த நாளை கணக்கிட்டு, அதில் மூத்தவர்கள், முன்னுரிமை பட்டியலில் இடம் பெறுவர். பிறந்த நாளிலும், ஒரே மாதிரியாக இருப்பவர்களுக்கு, ரேண்டம் எண் பயன்படுத்தப்படும்.

அதாவது, 10 இலக்க ரேண்டம் எண்ணின் கூட்டு தொகையில், அதிகம் உள்ளவர்கள், முன்வரிசையில் இடம் பெறுவர். ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்குக்கு விணணப்பிக்கும், 1.50 லட்சம் பேரில், அதிகபட்சம், 30 பேர் வரையில், ரேண்டம் எண் அடிப்படையில், தரவரிசை பட்டியலில் இடம் பெறுகின்றனர்.