பிளஸ் 1 மார்க் பட்டியல் இன்று முதல் வினியோகம்


பிளஸ் 1 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், இன்று முதல் வரும், 12ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூலை, 31ல் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள், அவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், தேர்வு துறையின் இணையதளத்தில், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பின், மாணவர்களை வரவழைத்து, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். வரும், 12ம் தேதிக்குள் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை வழங்கி முடிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பிளஸ் 1 மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும். அவர்கள், பிளஸ் 2 முடித்த பின், அரசு தேர்வு துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழ் வழங்கும் வரை மட்டுமே, தற்போதைய மதிப்பெண் பட்டியல் செல்லத்தக்கது என, அறிவிக்கப்பட்டுள்ளது.