மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., ஒதுக்கீடு

சென்னை : 'உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட எந்த பிரிவுக்கும், மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க முடியும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மருத்துவ கவுன்சில் மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்களை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. வழக்கின் தீர்ப்பை, வரும், 27ம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீடு என்பதை, உச்ச நீதிமன்றம் தான் வகுத்தது. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும், இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எனவே, தற்போதைய திட்டத்தில், எந்த மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றாலும், உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே முடியும். நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், தற்போதைய திட்டத்தில் இருந்து, விலகிச் செல்ல முடியாது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட, எந்த பிரிவுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றால், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.