இன்ஜி., கல்லுாரிகளில் பாகுபாடா? அண்ணா பல்கலை விளக்கம்!

சென்னை : 'அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், தரமான கல்லுாரிகள், தரமற்ற கல்லுாரிகள் என்ற பாகுபாடு இல்லை' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 16ல், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை; அவற்றில் மாணவர்கள் சேர வேண்டாம் என்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பல்கலையின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை என்றும், அவற்றின் பெயர், தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் போன்றவையும், சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகள், தரமற்றவை என்றும், தரமானவை என்றும், பாகுபாட்டுடன் பிரிக்கப்படவில்லை. இதுபோன்ற கல்லுாரிகளின் பெயர், விபர பட்டியலையும், அண்ணா பல்கலை வெளியிடவில்லை. எனவே, சமூக வலைதளத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.