தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தக வினியோகம்?

சென்னை : 'தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இலவசமாக பாட புத்தகம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், இலவச பாட புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டமும் ஒன்று.கொரோனா பரவல் காரணமாக, இந்த கல்வி யாண்டில், இன்னும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆனால், மாணவர்களுக்கு 'ஆன்லைனில்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசின் சார்பில், இலவச பாட புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பாட புத்தகங்களை அரசே இலவசமாக வழங்க வேண்டும் அல்லது சலுகை விலையில் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, பெற்றோரும், ஆசிரியர்களும் கூறியதாவது:பெரும்பாலான மாவட்டங்களில், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களில், 50 சதவீதத்துக்கு மேலானவர்கள், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.ஆனால், நகர்ப்புறங்களிலும், பெருநகரங்களிலும், சாதாரண ஏழை குடும்ப மாணவர்களும், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெருநகரங்களில், உள் கட்டமைப்பு வசதி குறைவு, ஆசிரியர்கள் பற்றாக்குறை, குடியிருப்புகளில் இருந்து அதிக துாரத்தில், அரசு பள்ளிகள் அமைந்திருப்பது, நகர்ப்புற பாதுகாப்பு பிரச்னை போன்றவற்றால், பெரும்பாலான குடும்பத்தினர், அரசு பள்ளிகளை தவிர்க்கின்றனர்.அதனால், கடன் வாங்கியாவது, தனியார் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

எனவே, தற்போதைய சூழல் கருதி, அனைத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும், சலுகை விலையில் பாட புத்தகங்களை வழங்க வேண்டும்.நகர் மற்றும் பெருநகர ஏழை குடும்ப மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளிகளில், இலவசமாகவே பாட புத்தகங்களை வழங்க வேண்டும். இந்த செலவை, பள்ளி கல்வித்துறை ஏற்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.