டி.வி சேனல் மூலம் பள்ளிப் பாடம் நடத்தக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொலைக்காட்சி சேனல் அல்லது ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சையது காலேஷா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கரோனா நோய்த்தொற்று முற்றிலும் நீங்கி மீண்டும் பழைய நிலைக்கு நாடு எப்போது வரும்? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலை மாற நீண்ட காலம் ஆகலாம். மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவா்கள் கல்வி கற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதே நிலை நீடித்தால், மாணவா்கள் கல்வி கற்கும் திறனை இழந்து விடுவா். ‘ஸ்வயம் பிரபாஎன்ற தொலைக்காட்சி சேனல் மூலம் கல்லூரி மற்றும் உயா் கல்வி மாணவா்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொலைக்காட்சி சேனல் அல்லது ஆன்லைன் வகுப்புகளை நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.