முன் அறிவிப்பின்றி, 'ரிசல்ட்' விளக்கம் கேட்டார் மந்திரி ; செங்கோட்டையன்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முன் அறிவிப்பின்றி வெளியிட்டது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம், அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கேட்டார். தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் திடீரென வெளியிடப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, முடிவுகளை வெளியிட்டதால், மாணவர்களும், பெற்றோரும், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள சிரமப்பட்டனர். பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கும், தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து, முன்கூட்டியே தகவல் அளிக்கப்படவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். முதல்வர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியதால், பள்ளி கல்வி செயலர் மற்றும் கமிஷனரின் உத்தரவுப்படி, தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, தேர்வு துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.இதையடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகளை, முதல்வரின் ஆலோசனை பெற்று, சரியான முறையில் திட்டமிட்டு வெளியிடுவது என, முடிவு செய்யப் பட்டது. அதேபோல, பள்ளிகளை மீண்டும் திறந்து, வகுப்புகளை நடத்துவது, 'ஆன்லைன்' வழியில் பாடங்கள் நடத்தும் வழிமுறைகள், கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில், மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர் செங்கோட்டையன், இன்று அறிவிப்பு வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.