கலை, அறிவியல் படிப்பு மாணவர்கள் ; சான்றிதழ் பதிவேற்றம்

சென்னை : கலை, அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், வரும், 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை, 20 முதல், ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கியது. இதில், முதல் நாளில், ஒரு லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.நான்கு நாட்களில், 2.09 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1.28 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திஉள்ளனர். வரும், 31ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்ப பதிவை முடித்து கொள்ள வேண்டும்.இந்நிலையில், விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள், தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்று முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதால், அவற்றை மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம். ஆக., 1 முதல், 10 வரை, www.tngasa.in என்ற இணையதளத்தில், சான்றிதழ் பதிவுகளை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.