வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் போட்டோக்களில் 8ல் ஒரு போட்டோ போலியானது மற்றும் தவறாக வழிநடத்துபவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போலி
செய்திகள் பரவுவதில் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், சில அரசியல் கட்சி சார்பில் இயங்கும் வாட்ஸ்ஆப் குரூப்கள் போலி செய்திகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவை வெறுப்பையும், வன்முறையையும் எளிதில் தூண்டுகிறது. இது தொடர்பாக இரண்டு எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்தாண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் வரை சேகரிக்கப்பட்ட பல ஆயிரம் படங்களை பற்றிய பகுப்பாய்வில் இருந்து, குழுக்களில் பகிரப்பட்ட ஒவ்வொரு 8 புகைப்படங்களில் ஒன்று தவறானது என கண்டறிந்துள்ளனர். இரு ஆராய்ச்சியாளர்களும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி சார்ந்த வாட்ஸ்ஆப் குரூப்களில் சேர்ந்தனர். 2019ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 2,50,000 பயனர்களிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான செய்திகளைத் தொகுத்துள்ளனர். அவைகளில் 35 சதவீதம் படங்களாகவும், 17 சதவீதம் வீடியோவாகவும் கண்டுபிடித்தனர்.
அதனை
அனுபவம் வாய்ந்த மூன்று உண்மை சரிபார்ப்பவர்களின் உதவியுடன் போலியானது அல்லது உண்மையானது என வகைப்படுத்தினர். இதில் 10 சதவீத புகைப்படங்கள் தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இப்படி தவறாக வழிநடத்தும் படங்களில் 30 சதவீதம் மீம்ஸ் வகையை சேர்ந்தது எனவும் கண்டறிந்தனர். போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் 10 சதவீதம் மட்டுமே. இப்படி அரசியல் சார்ந்த வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் 8 போட்டோக்களில் ஒன்று தவறாக வழிநடத்துபவையாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.