முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை

சென்னை : 'போராட்ட காலத்தில் எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 5,068 பேருக்கு, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டது. இதன் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு அனுமதி, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை.

நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்கின்றன.மேலும், நிர்வாகிகள் பலர் ஓய்வு பெறும் நாளுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கொரோனாவை விட, கொடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.