கரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக் கூறி, பல்கலைக்கழகம், கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இருந்தனர்.
ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்த முடியாமல் ரத்து செய்வதாகத் தெரிவித்தன.
இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் , பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது.
ஆனால், கரோனா வைரஸ் காலத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது இயலாதது, தேர்வுகளை நடத்தும் முடிவை மாநில அரசுகளிடமே தர வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழகம், டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்கள் கடிதம் எழுதின. இதில் மகாராஷ்டிரா, டெல்லி அரசுகள் , தேர்வுகள் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாகவே அறிவித்துவிட்டன.
ஆனால், யுஜிசி தேர்வு நடத்துவதில் திட்டவட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், ''755 பல்கலைக்கழகங்களிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. அதில் 194 பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டதாகவும், 366 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன'' எனக் குறிப்பிட்டது.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாவின் யுவசேனா பிரிவு யுஜிசியின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக, கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை மகாராஷ்டிரா அரசு அரசு ரத்து செய்ததற்கு எதிராக பல்கலைக்கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினரும், பேராசிரியருமான தனஞ்சய் குல்கர்னி என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த
வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா முன்னிலையில் நடந்தபோது, யுஜிசி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது “ தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்துள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டம் என்பது தனித்தன்மை வாய்ந்த சிறப்புச் சட்டம், இதை மற்றொரு சிறப்புச் சட்டத்தின் மூலம் அதன் முக்கியத்துவத்தை இழக்கச் செய்ய முடியாது.
செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 29, ஜூலை 6-ம் தேதி யுஜிசி பிறப்பித்த வழிகாட்டல் நெறிமுறைகளுக்கு முரணாக மாநில அரசின் உத்தரவு அமைந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த வழிகாட்டல் நெறிமுறைகளை யுஜிசி வழங்கியது. மாணவர்களின் கல்வி, எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் உடல் நலன் கருதிதான் இந்த வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கும், முதல், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமல் ஒத்திவைக்கும் முடிவு என்பது நாட்டின் உயர்கல்வியின் தரத்தை நேரடியாக பாதிக்கும். ஆதலால், அனைத்தை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க கடமைக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை மாணவர்களால் தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால்கூட அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதக்கூட வாய்ப்புகளை வழங்கலாம்.
நாங்கள் அளித்த வழிகாட்டல் வழிமுறைகளில் மாணவர்கள் தேர்வுகளை ஆன்லைனிலும், நேரடியாக வந்தும் தேர்வு எழுதவும், இரு வழிகளிலும் தேர்வுகளை எழுதவும் வாய்ப்பளித்துள்ளோம். ஆதலால், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்ய மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டது.