வால்வுடன் என்.95 மாஸ்க் பயன்படுத்தக் கூடாது; சுகாதாரத் துறை எச்சரிக்கை

புதுடில்லி: வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் பயன்படுத்துவது கொரோனா பரவலை தடுக்காது மேலும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முகக்கவசம் முக்கிய பங்காற்றுகிறது. சமீபத்திய ஆய்வில் முறையாக முகக்கவசம் அணிந்தால் கொரோனா தாக்கும் அபாயம் 65% குறைவு என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஒன்றை, மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குனர், மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.என்-95 முகக்கவசத்தின் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூட முகக்கவசங்களை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். இந்த முகக்கவசம் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது. இதனால் நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தீங்காக முடியும். எனவே அனைவரையும் மூக்கு, வாயை முழுவதுமாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்துங்கள். பொருத்தமற்ற முறையில் என்-95 முகக்கவச பயன்படுத்தப்படுவதை தடுக்கவும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலேயே முகக்கவசம் தயாரித்து பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஏப்ரலில் வெளியிட்டுள்ள வழிகாட்டலில், பருத்தி ஆடையில் மூக்கு வாயை இடைவெளி இன்றி முழுமையாக மறைக்க வேண்டும். நீரில் உப்பு போட்டு, அதில் முகக்கவசத்தை 5 நிமிடம் கொதிக்க வைத்து, பின்னர் காய வைத்து பயன்படுத்தலாம். இதனை தினமும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியிருந்தது.