5 நாளில் இன்ஜி., படிப்பிற்கு கூடுது மவுசு

சென்னை : பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஐந்து நாட்களில், 74 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதனால், இன்ஜினியரிங் கல்லுாரி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளனர்.இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, 16ம் தேதி துவங்கியது. முதல் நாளில், 23 ஆயிரம் பேர் விண்ணப்பம் பதிவு செய்தனர்.அடுத்தடுத்த நாட்களில் விண்ணப்ப பதிவுகள் அதிகரித்து வருகின்றன. ஐந்தாம் நாளான நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, 74 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது, கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, அதிக விண்ணப்ப பதிவாகும். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கு, அதிக மாணவர்கள் பதிவு செய்து வருவது, இன்ஜினியரிங் கல்லுாரி நிர்வாகிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவர்களே, இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதிலும், 80 முதல், 90 சதவீதம் பேர் மட்டுமே படிப்பில் சேர்கின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டில் அதிக மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்கின்றனர். எனவே, முந்தைய ஆண்டுகளை விட, அதிக மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது