சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு வரும், 30 வரை நடத்த முடிவு

தேர்வு மற்றும் ஆளுமை தேர்வுகளை, வரும், 30 வரை நடத்தவுள்ளதாக, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

யு.பி.எஸ்.சி., சார்பில், கடந்தாண்டு நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடந்த மார்ச் இறுதியில் துவங்கி, ஏப்ரல் வரை, நேர்முக தேர்வு மற்றும் ஆளுமை தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்த தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளை, நேற்று துவங்கி, வரும், 30 வரை நடத்துவதாக, யு.பி.எஸ்.சி., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, யு.பி.எஸ்.சி., தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:நேர்முக தேர்வு மற்றும் ஆளுமை தேர்வுகளில் பங்கேற்கவுள்ள தேர்வர்களுக்கு, எப்போது தேர்வு என்பது குறித்து, முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில், நேர்முக தேர்வுக்கு வரும் தேர்வர்களுக்கு, குறைந்தபட்ச விமான கட்டணம், யு.பி.எஸ்.சி., தரப்பில் தரப்படும். நேர்முக தேர்வுக்கு வரும் மாணவர்கள், எந்தவித இடையூறுமின்றி வந்து செல்வதற்கு வசதியாக, சம்பந்தபட்ட மாநில அரசுகள், 'இ - பாஸ்' வழங்க வேண்டும்.

தேர்வு நடக்கும் இடங்களில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படும். இவ்வாறு, யு.பி.எஸ்.சி., தரப்பில் கூறப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., புவி அறிவியல் தேர்வு, அக்., 17ம் தேதியும், இன்ஜினியரிங் மெயின் தேர்வு, அக்., 18ம் தேதியும், துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.