ஒத்துழைக்க மறுக்கும் மாணவர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் அவதியுறும் ஆசிரியர்கள்!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே இருக்கும் மாணவர்களுக்கு சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் ஜாலியாக வகுப்புகளில் கலந்து கொண்டாலும், ஆசிரியர்கள் அதிகம் சோர்வடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மீம்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில், ஆசியர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.
குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் 
எடுப்பது மிகவும் சிரமாக இருப்பதாக கூறுகின்றனர். குழந்தைகள் வீடியோ காலில் இருக்கும் போது தொலைக்காட்சிகளில் கார்ட்டூன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் முழுக் கவனமும் படிப்பில் இல்லை என்றும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் அதிக வேலைகள் இருப்பதால் பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் சேட்டைகள் மற்றும் அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களால் ஆசிரியர்கள் பாடம் நடத்திவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அனைவரையும் ஒன்றாக ஒருங்கிணைத்து பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து தடைகளையும் மீறி பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தினாலும் மாணவர்கள் அடுத்தடுத்து ஏதாவது ஒரு பேச்சு கொடுப்பதாக கூறுகின்றனர். தண்ணீர் குடிக்க அனுமதி கேட்பது, வகுப்பு முடிவதற்கான நேரத்தை நினைவுபடுத்துவது, ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொள்வது, வீட்டில் தன்னை அழைக்கிறார்கள் என கூறுவது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை மாணவர்கள் கொடுப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தையும் மீறி சிறப்பான முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடப்பது எளிதான காரியமாக இருப்பதில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்களின் மனநிலையிலும் மாறுதல்கள் காணப்படுவதாகவும், மன அழுத்தம் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.