அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஆன்லைன்' கணித பயிற்சி

சென்னை; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, முதுநிலை கணிதம் குறித்து, 'ஆன்லைனில்' இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை
கணித ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியாக, ஆன்லைனில், 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

'பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில், இந்த பயிற்சியை, ஆசிரியர்கள் பெறலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கணிதத்தில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு, இந்த பயிற்சி உதவும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தினமும் காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, நேரலை பயிற்சியும், பின், மாலை, 5:00 மணி வரை, ஆன்லைன் வழி பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற விரும்பும் ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.