ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமல்

சென்னை : தமிழகத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பிறப்பித்துள்ள சில தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வர உள்ளன.


தமிழகத்தில், மூன்றாவது கட்டமாக, இன்று முதல், வரும், 17 நள்ளிரவு, 12:00 மணி வரை, மத்திய அரசு அறிவித்தபடி, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில், சில தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அரசு அறிவித்த தளர்வுகளின்படி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இன்று முதல், காலை, 6:00 மணியில் இருந்து, மாலை, 5:00 வரை திறந்திருக்கும்.

ஓட்டல்கள், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கும்; ஆனால், 'பார்சல்' வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற கடைகளுக்கும், நேரக் கட்டுப்பாடுகள் உண்டு. 'பொது மக்கள், அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; முக கவசம் அணிந்து, வெளியில் வர வேண்டும்' என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.