தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கம் கோரிக்கை

அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதிய நிறுத்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் .பீட்டர்ராஜா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க நிதி தேவை என்பதற்காக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் 
அகவிலைப்படி மற்றும் சரண்விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது வருத்தமான செயலாகும். அதனுடன் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் அா்ப்பணிப்பு உணா்வுடன் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் இடையே பெரிதும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் அகவிலைப்படி, சரண்விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைப்பது ஆகிய அறிவிப்புகளை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.