அரசு உத்தரவை மீறி ஆண்டு இறுதி தேர்வு

சென்னை : ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி தரப்பட்டுள்ள நிலையில், 'பள்ளியை திறந்ததும், தேர்வு நடத்துவோம்' என, சில பள்ளிகள், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பு வதால், பெற்றோர் குழப்பம் அடைந்து உள்ளனர்.


கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மார்ச், 10 முதல் விடுமுறை விடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட வில்லை. அதனால், தேர்வையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்றும், அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்றும், தமிழக அரசு அறிவித்தது; மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.இந்த உத்தரவுக்கு பின், பல தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் 'வாட்ஸ் ஆப்' வழியாக தகவல்கள் அனுப்பி உள்ளன.

அதில், 'பள்ளிகளை மீண்டும் திறந்ததும், ஏற்கனவே படித்த பாடங்களுக்கு, சிறிய தேர்வு நடத்தப்படும். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்' என, கூறியுள்ளன. இந்த செய்தியால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். 'தேர்வு இல்லை; அனைவருக்கும் தேர்ச்சி' என, அரசே கூறிவிட்ட நிலையில், பள்ளிகள் தரப்பில் தேர்வு வைப்பதாக, மாணவர்களை மிரட்டுவது குறித்து, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.