தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

மத்திய உள்துறை அறிவிப்பின்படி தமிழ கத்திலும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சில தளர்வுகளையும் முதல்வர்
பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே17-வரை ஊரடங்கை நீட்டிப்பது, எந்தெந்த தொழிற்பிரிவு களுக்கு தளர்வு அளிப்பது குறித்து முடி வெடுக்க முதல்வர் பழனிசாமி தலைமை யில் நேற்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் 1.40 மணி வரை நடைபெற்ற இக் கூட்டத்துக்குப்பின் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகள்படியும், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தமிழகத்தில் மே 4 முதல் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் எல் லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப் பாட்டு பகுதிகளைத்தவிர பிற பகுதி களில் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. அதேபோல், சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு குறிப்பிட்ட சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுவான அறிவுறுத்தல்கள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடை வெளியை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் பாது காப்பாக பணியாற்றுவதை கண் காணிக்க வேண்டும். அரசால் வெளி யிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப் பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படு கிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில், 5 பேருக்குமேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண் காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

l ஏற்கெனவே அரசால் அனுமதிக் கப்பட்ட வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், அத்தியவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தடங்கலும் இன்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

l கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், அரைப்பு நிறுவனங்கள் மற்றும் இவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்.

l ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமான பொருட்கள், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள், கைபேசி, கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் நேரக் கட்டுப் பாடுகளுடன் இயங்க அனுமதி.

l பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

l பெரிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,கட்டுமான நிறுவனங்கள் பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டுக்கள் பெற வேண்டும். நகரப் பகுதிகளில் பணியாளர்களை தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்து கள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம்.

l அந்த வாகனங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர்களை மட்டுமே தனி மனித இடைவெளியை கடைபிடித்து அழைத்து வரவேண்டும்.

l சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில் கள், தனிக் கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

l மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 33% பணியாளர்களுடன் செயல்படும்.

தொடரும் தடை

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான தடை கள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

l பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறு வனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் இயங்காது.

l வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை நீடிக்கும்.

l திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங் கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சி யகங்கள், நீச்சல்குளங்கள், விளை யாட்டு அரங்குகள், பெரிய அரங்கு கள், கூட்ட அரங்குகள் போன்றவை இயங்கக் கூடாது.

l முடிதிருத்தகங்கள், அழகு நிலையங் களுக்கு அனுமதி கிடையாது.

l பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான பொதுமக்கள் போக்குவரத்து தடை நீடிக்கிறது.

l டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா இயங்க தடை தொடர்கிறது.

l பணியாளர் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகள், தங்கும் வசதி உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்கள் இயங்க அனுமதி இல்லை.

l இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

l திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போ துள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறை களைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்க வேண்டும். மே 6-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த்தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறையக் குறைய, தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகள் திறக்கலாம்கட்டுமானப் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதிவிமானம், ரயில், பஸ் போக்குவரத்துக்கு தடை நீடிப்புஅமைச்சரவை கூட்டத்துக்குப்பின் முதல்வர் உத்தரவுஒரேநாளில் 231 பேருக்கு கரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று மட்டும் 158 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் சென்னையில் 48 வயதான மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 231 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஏற்கெனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 194 பேர் ஆவர். புதிதாக 37 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 174 பேரும் அரியலூரில் 18 பேரும் காஞ்சிபுரத்தில் 13 பேரும் திருவள்ளூரில் 7 பேரும் செங்கல்பட்டில் 5 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த 1,341 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வந்த 76 வயது முதியவர் நேற்று இறந்துள்ளார். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புடன் 1,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். அறிகுறிகளுடன் 2,099 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 10,049 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 685 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்க காரணமான கோயம்பேட்டு மார்க்கெட் வைரஸ் பரவும் மையமாக மாறியுள்ளது. இங்கு வியாபாரிகள், தொழிலாளிகள் மற்றும் வந்து சென்ற பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், திருவான்மியூர் மற்றும் வடபழனி மார்க்கெட்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.