அரசு பஸ்கள் இயக்கம் எப்போ? போக்குவரத்து கமிஷனர் தகவல்

சென்னை : ''தமிழகத்தில், பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, மருத்துவ நிபுணர் குழு தான் தீர்மானிக்கும்,'' என, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி ஜவஹர் கூறினார்.


தென் மாநிலங்களில், பொது போக்குவரத்து துவங்கி உள்ளது. அந்த மாநிலங்களை விட, கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழகத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள், 'பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி ஜவஹர் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், பொது போக்குவரத்தை அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

பஸ் மற்றும் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களின் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு தான் அறிவிக்கும் என, அரசு தெரிவித்து உள்ளது. அதனால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த, மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து, அரசு நெறிமுறைகளை வகுக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.