கொரோனா ஒழிப்புக்கு ஆசிரியர்கள் ; கலெக்டர்களுக்கு கல்வித்துறை கடிதம்

சென்னை : அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகம் முழுதும், கொரோனா வைரஸ்
ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பல இடங்களில் மருத்துவம் சாரா பணிகளில், ஆசிரியர்கள் பலர் ஈடுபடுகின்றனர்.

கொரோனா ஒழிப்பில், தன்னார்வலர்களாக பங்கேற்க, ஆசிரியர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்து, கடிதம் அனுப்பியுள்ளன. எனவே, மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, தன்னார்வமிக்க ஆசிரியர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அவர்களில், 50 வயதுக்கு குறைவானவர்களை, கொரோனா ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம்.

பொது இடங்களில் மக்களை நெறிப்படுத்துதல், கொரோனா தொடர்பான அரசின் கணக்கெடுப்பு நடத்துதல், கடை வீதிகளில், தனி மனித விலகலை கடைப்பிடிப்பதை கண்காணித்து உறுதி செய்தல், ரேஷன் கடைகளில் மக்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.