அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும்; வாரத்தில் 6 நாட்கள் வேலை

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.


தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்று துவங்கியது. இந்நிலையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளனர். எப்படி செயல்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது.

* தமிழக அரசு அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம் போல செயல்பட துவங்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள் செவ்வாய்; இரண்டாம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் பணியாற்ற வேண்டும். மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனி பணியாற்ற வேண்டும்இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்

* 'குரூப் - ஏ' பிரிவு அலுவலர்கள் வாரத்தின் ஆறு நாட்களும் பணிக்கு வர வேண்டும். அனைத்து பணியாளர்களும் அலுவலக பணிகளை கவனிக்க மின்னணு தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

* சுழற்சி முறை பணி அனைத்து அரசு அலுவலகங்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்

* ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புகளை பின்பற்றி, அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட துவங்க உள்ளன.