அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணையதளம் மூலம் நீட் பயிற்சி: ஜூன் 15-இல் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் பிளஸ் 2 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட நீட் பயிற்சி, பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் நுழைவுத்தோவு ஜூலை 26-இல் நடைபெற உள்ளது. இதையடுத்து '-பாக்ஸ்' என்ற நிறுவனம் மூலம் மாணவா்களுக்கு இணையவழியில் பயிற்சி அளிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 
இதற்கான பயிற்சி வகுப்புகள், ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் .கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட '-பாக்ஸ்' நிறுவனம் மூலம் நீட் தோவுக்கு இணையவழியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
 
இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய 6,500 கேள்விகள் இடம்பெறும். தினமும் தலா 4 மணி நேரம் காணொலி பயிற்சி வகுப்புகள் மற்றும் செய்முறை தோவுகள் நடத்தப்படும். எனவே, நீட் தோவுக்கு விண்ணப்பித்துள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள், இந்தப் பயிற்சிக்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவலை மாணவா்களுக்குத் தெரிவிக்க, பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.