10, 12 தேர்வுகள் ரத்து: சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் வேறு வழியின்றி பொதுமுடக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு நடத்தப்படாத பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சில பாடங்களுக்கான பொதுத் தேர்வை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்வை மேலும் ஒத்திவைக்கும்படியும், தேர்வை நடத்தாமல் மாற்று வழிகளில் மாணவர்களுக்கு முடிவு வழங்கலாம் என்றும் இருவிதமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், கோவா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் சி.பி.எஸ்.. வாரியமும் இதுவரை நடத்தாமல் விட்ட பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான புதிய அட்டவணையை அறிவித்து இருக்கின்றன. தேர்வுகளுக்கு மாணவர்களை அழைத்துவர கேரளமும் தமிழகமும் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும் பணியில்கூட இறங்கிவிட்டன.
 
இதற்கு இடையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மேல்நிலைக் கல்வி வாரியம் தங்களுடைய மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பள்ளி அளவில் நடத்தப்பட்ட இடைநிலைத் தேர்வுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க இருப்பதாக முடிவெடுத்துள்ளது.
மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் சத்தீஸ்கர் மாநில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புவியியல் மற்றும் சில பாடங்களுக்கான தேர்வு நடைபெறவில்லை. அதேபோன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான சில பாடங்களிலும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருவேளை இடைநிலைத் தேர்வுகளையும் எழுதத் தவறிய மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் அளிக்கப்பட்டு அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் கடந்த மார்ச் 16-ம் தேதியில் இருந்து மூடப்பட்டன. அதன் பிறகு மார்ச் 24 முதல் மே 17 வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.