தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை தற்போது வாங்க கூடாது : தனியார் பள்ளி இயக்குனர் எச்சரிக்கை

சென்னை : தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 13
மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக

உயர்ந்துள்ளது.கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்நிலையில் தனியார் பள்ளி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினால், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது