அகவிலைப்படி உயர்வு ரத்து - முன்னாள் பிரதமர் கண்டனம்

மத்திய அரசு ஊழியர்கள், ஆயுதப்படை வீரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடினமான இந்தக் காலகட்டத்தில் இந்த உத்தரவு தேவையற்றது. இது அவர்களின் வேதனையை மேலும் அதிகப்படுத்தும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி, டிஆர் உயர்வு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நிதியமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
 
2021-22 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் டிஏ, டிஆர் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.37,530 செலவிட வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசின் டிஏ, டிஆர் முறையையே பின்பற்றி வருகின்றன.
மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்தினால் ரூ.82,566 கோடி சேமிக்க முடியும். மத்திய அரசு, மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்துவதன் மூலம் ரூ.1.20 லட்சம் கோடி சேமிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் வேகமாகச் செயல்பட முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் வீடியோவில் வெளியிட்ட பதிவில், “அகவிலைப்படி உயர்வை நிறுத்தியதற்குப் பதிலாக இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் பக்கம் நாம் நிற்க வேண்டும். இந்த நேரத்தில் அகவிலைப்படி உயர்வை நிறுத்திய மத்திய அரசின் செயல் தேவையில்லாதது. இது அரசு ஊழியர்களையும் படை வீரர்களையும் மேலும் கடினமான சூழலுக்குக் கொண்டு செல்லும்எனத் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான .சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டகருத்தில், “மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, புல்லட் ரயில் திட்டம், நாடாளுமன்ற விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றுக்கான செலவுகளை நிறுத்தியிருக்க வேண்டும்எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக இந்தப் பணத்தை மாற்றியிருந்தால்கூட வரவேற்றிருப்போம். ஆனால் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடப் பணியைத் தொடர்கிறீர்கள். அமைச்சர்களுக்கு, பிரதமருக்குப் புதிய கட்டிடம் கட்டப்போகிறீர்கள். அரசின் செலவுகளைக் குறைத்தால் ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிக்க முடியும். ஆனால் அரசு ஊழியர்கள், படை வீரர்கள், ஓய்வூதியதாரர்ளுக்கு நிம்மதியளிக்க மறுக்கிறீர்கள்எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி கூறுகையில், “செலவுகளை முறைப்படுத்தும் ஆணையத்தை அமைத்துவிட்டு மத்திய அரசு அதன்பின் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஊதியத்தைக் குறைப்பது குறித்துச் சிந்தித்திருக்க வேண்டும்எனத் தெரிவித்தார்.