அரசு துவக்க பள்ளியில் ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை!

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'ஆன்லைனில்' மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இப்பள்ளியில் தற்போது, 429 மாணவர்கள் படிக்கின்றனர்; 12 ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்கள் மூவரும், பணிபுரிகின்றனர். கொரோனா பரவலால்,பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020- 21ம் ஆண்டுக்கு, ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்த, தலைமையாசிரியர் தமிழரசி அனுமதி அளித்தார். மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆசிரியர் செந்தில்நாதன், கூகுளில் வடிவமைத்தார்.பள்ளி மாணவர்களின் பெற்றோர் அடங்கிய, 'வாட்ஸ் ஆப்' குழு, ஏர்வாடி ஊராட்சி மன்றம் என்றமுகநுால் பக்கத்தில், விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒரே நாளில், ஆறு மாணவர்கள், ஆன்லைனில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் செந்தில்நாதன் கூறுகையில், ''ஊரடங்கால், ஆன்லலைனில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளில், உரிய சான்றிதழ்களுடன் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்,'' என்றார்.