உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!

ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது.
 
அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.
இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.
இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
 
 1) முதலில் ' https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.
2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.
4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.
5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.
6) இந்தப் பக்கத்தில்  Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)
 
7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்
8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)
9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.
10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.
ஒருவேளை, எந்த டிரான்ஸாக்ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.