ஜே.இ.இ., தேர்வு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., மற்றும், என்.ஐ.டி., போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு, இந்த நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தாண்டு, இரண்டு முறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.ஜனவரியில் முதல் தேர்வு முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்ரலில் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, பிப்., 7ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. நேற்றுடன் பதிவு காலம் முடிந்தது.இந்நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in என்ற, இணையதளத்தில் அறியலாம்.