தினமும் வாழை இலையில் மதிய உணவு... அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி...!

புதுச்சேரியில் அரசு தொடக்கப் பள்ளியில் தினமும் மாணவர்களுக்கு வாழை இலையில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றான வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கத்தை வில்லியனூர் கொம்யூன், கீழ்சாத்தமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஏற்பாடு செய்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வழக்கமாக மாற்றியுள்ளனர்.

முதலாவதாக இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் நெகிழி இல்லா பள்ளி வளாகமாக அறிவித்து பள்ளியில் இருந்த அனைத்து வகை நெகிழிகளையும் சுத்தம் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவினை வாழை இலையில் சாப்பிடும் வழக்கத்தை கடந்த 4 மாதமாகத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

மாணவர்கள் வாழை இலையில் சாப்பிடுவதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆரோக்கியமாக வாழ முடியும். புற்று நோயைக் குணப்படுத்தும்.

ஆசிரியர்களின் இந்த முயற்சியை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டுகின்றனர். இதுபோன்ற சமூக மற்றும் சூழல் அக்கறை சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இதற்காக சிறு வாழை தோட்டத்தினையும் உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.