5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித்தது ஏன்?- முதல்வர் விளக்கம்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித்தது ஏன் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, ''உலகத் தரத்தில் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித்தோம்.
போட்டித் தேர்வு தொடர்பான அச்சம் மாணவர்கள் மத்தியில் குறையும் என்பதன் அடிப்படையிலேயே தேர்வைக் கொண்டு வர நினைத்தோம். பொதுத் தேர்வு வைத்தால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் சில மாணவர்கள் தோல்வி அடையக் கூடும். எனினும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 
ஆனால் அதை எதிர்க் கட்சிகள் நிறைவேற்ற விடவில்லை. கிராமப்புற மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குத் தயார்படுத்த பொதுத் தேர்வுகள் அவசியம். இதன் மூலம் மாணவர்களின் தரத்தை அறிந்துகொள்ள முடியும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ''இடைநிற்றல் அதிகரிக்கும், மாணவர்களிடையே உளவியல் பாதிப்பு உருவாகும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்'' என்றெல்லாம் அறிவுசார் சமூகத்தினர் எதிர்வினையாற்றினர்.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது