எம்.பி.பி.எஸ்., தேர்வுகள்: பல்கலையில் நேரடி கண்காணிப்பு

சென்னை : முறைகேடுகளை தடுக்க, 'சிசிடிவி' வாயிலாக, எம்.பி.பி.எஸ்., தேர்வை கண்காணிக்க, மருத்துவ பல்கலை துணைவேந்தர் அறையில் சிறப்பு வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ கல்லுாரிகளில், 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக, போலி மாணவர்கள் சேர்ந்த விவகாரம், 2019ல் விஸ்வரூபம் எடுத்தது.கண்காணிப்பு அதேபோல, இரண்டு தனியார் மருத்துவ கல்லுாரி மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்டனர். அதனால், இரண்டு மருத்துவ கல்லுாரிகளும், தேர்வு மையங்களாக செயல்பட, மருத்துவ பல்கலை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களை, நேரடியாக கண்காணிக்கும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., இரண்டாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான, எழுத்து தேர்வு நடந்து வருகிறது.

இந்த தேர்வுகள், 35 மையங்களில் நடந்து வருகின்றன. தேர்வு துவங்கும், 15 நிமிடத்திற்கு முன் தான், கேள்வித்தாள், கணினி வழியாக, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், தேர்வு மையங்கள், 'சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு காட்சிகள், 'சிடி' வாயிலாக பெறப்பட்டு, முறைகேடுகள் நடக்கிறதா என, பார்க்கப்படுகிறது.



முறைகேடுகள்

தற்போது, தேர்வு அறைகளை நேரடியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன், தேர்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை, பல்கலை துணை வேந்தர் அறையில், நேரடியாக பார்க்க முடியும். நேரடியாக மாணவர்களின், ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுவதால், முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. வருங்காலங்களில், அனைத்து மருத்துவ தேர்வு களிலும், நேரடி கண்காணிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.