பரவுகிறதா கொரோனா வைரஸ்?

சென்னை: ''கேரளாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக - கேரள எல்லை மாவட்டங்கள், தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளன,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


சீனாவில் உருவான, 'கொரோனா வைரஸ்' தொற்று, இந்தியா உட்பட, 25 நாடுகளில் பரவி உள்ளது. இந்த தொற்றுக்கு, தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், சீனாவில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து வருவோருக்கு, விமான நிலையங்கள், துறைமுகங்களில், சுகாதார அதிகாரிகள், 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக, காய்ச்சல் இருக்கிறதா என்பதை, கண்காணிக்கின்றனர்.

தமிழகத்தில், அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், சுகாதார அதிகாரிகள், மாவட்ட வாரியாக, கொரோனா வைரஸ் குறித்த அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளில், '108' ஆம்புலன்ஸ் சேவையின் பங்களிப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி பங்கேற்றனர்.

பின், அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையை தொடர்ந்து வருகிறோம். கோவை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, சீனாவை சேர்ந்த, ஒரே குடும்பத்தை சார்ந்த, நான்கு பேரின், ரத்த மாதிரிகள், புனேவிற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது, தெரிய வந்துள்ளது. அதேபோல, சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில், 17 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அதிலும் பாதிப்பில்லை என, தெரிய வந்துள்ளது. இதுவரை, 21 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த நோய் இல்லை என, ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. மேலும், மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக, கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள், ஓரிரு நாட்களில் வரும்.

சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து, இதுவரை, 1,225 பேர் வந்துள்ளனர். அவர்கள், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். சீனாவில் இருந்து வரும் பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கேரளாவில், மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். தமிழக - கேரள எல்லையில் உள்ள, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்புக்கு, போதுமான வசதிகள் உள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில், 228 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'என் 95' மற்றும் மூன்று அடுக்கு, 'மாஸ்க்' உள்ளிட்டவை போதுமான அளவில் உள்ளன. தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.



சென்னையில் பரிசோதனை வசதி
இந்தியாவை பொருத்தவரையில், கொரோனா வைரஸ் ஆய்வகம், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் மட்டுமே இருந்தது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், புனேவிற்கு அடுத்தபடியாக, சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்தில், மூன்று நாட்களில், 17 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; மூன்று பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


கொரோனாவிற்கு ஒருவர் அட்மிட்

கீழ்பாக்கத்தில் ஒருவர், 'அட்மிட்'சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த, 40 வயது மதிக்கதக்க நபர், ஜனவரி, 14ல் சீனாவிற்கு சென்றார். அங்கு, ஜன., 24 வரை தங்கிவிட்டு, சென்னை திரும்பினார். திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், நேற்று முன்தினம், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அவரை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 'அவரது ரத்த மாதிரி சேரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக, இன்று கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்' என, மருத்துவனை டீன் வசந்தாமணி தெரிவித்தார்.