5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பெற்றோர் எதிர்ப்பால் அரசு முடிவு

சென்னை : ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. பெற்றோர் உட்பட, பல தரப்பிலும்
எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இம்முடிவை, தமிழக அரசு எடுத்துள்ளது.

'மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற மத்திய பாடத்திட்டம் உள்ள பள்ளிகளிலும், பிற மாநிலங்களிலும், பொதுத்தேர்வு கிடையாது. ஆனால், தமிழக அரசு முன்னோடியாக, இந்த தேர்வை அறிவித்தது.



சட்ட சிக்கல்

இந்த அறிவிப்புக்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் என, பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. குழந்தைகளிடம் தேர்வு பயத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என, பெற்றோர்களும் அச்சம் தெரிவித்தனர். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2012ல் அமலுக்கு வந்த, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், முப்பருவத் தேர்வு முறை அமலில் உள்ளது. இதற்கான அரசாணையை ரத்து செய்யாமல் அல்லது அதை திருத்தாமல், புதிய தேர்வு முறையை அமல்படுத்த முடியாது என்ற, சட்ட சிக்கலும் ஏற்பட்டது.

அதனால், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, முப்பருவத் தேர்வு முறையும் உண்டு; பொதுத்தேர்வும் உண்டு என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில், விரிவான செய்திகள் தொடர்ந்து வெளியாகின.

பணிகள் நிறுத்தம்இந்நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கடந்த வாரம், வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டதுடன், தமிழக அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டனர். இதற்கிடையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு தரப்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டது.

அதேபோல், பொதுத்தேர்வு பணிகளை நிறுத்தி வைக்கவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அரசு அதிரடி முடிவுஇந்த பிரச்னையால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பாதிப்பு ஏற்படும் என, ஆளும் கட்சியினர் கருதினர். இதையெல்லாம் பள்ளி கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து, முதல்வர் ஒப்புதல் பெற்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பகளுக்கான பொது தேர்வை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு நடத்தப்படும் என, 2019 செப்., 13ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வந்தன.அவற்றை, அரசு கவனமுடன் பரிசீலித்து, அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்து உள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வரவேற்பு

இந்த அறிவிப்புக்கு, தமிழக தனியார் பள்ளிகள் சங்கம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளன. பெற்றோர்கள், சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை பரிமாறினர். தேர்வுத்துறை, பள்ளி கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், பணிச் சுமை குறைந்ததாக, நிம்மதி அடைந்துள்ளனர்.


7 ஆண்டு முயற்சிக்கு முற்றுப்புள்ளி:
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணிகள், ஏழு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, பார்லிமென்டில் சட்டமாகி, இறுதியில் ரத்தாகியுள்ளன. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், 5 வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, கட்டாயமாக, இலவச கல்வி கற்கும் உரிமை உள்ளது.

இதன்படி, 14ம் வயது வரை, அதாவது எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை தேர்ச்சி இழப்பின்றி, 'ஆல் பாஸ்' செய்யும் சட்டம், நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை, சில மாநிலங்கள் தவறாக பயன்படுத்தி, பாடங்களை நடத்தாமலும், தேர்வு வைக்காமலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தன.

இது குறித்து, காங்கிரஸ் ஆட்சியின் போது, 2013ல், மத்திய அரசு குழு அமைத்து, ஆய்வு நடத்தியது. இக்குழுவின் பரிந்துரைகள், 2014ல், மத்திய அரசிடம் வழங்கப்பட்டன. அப்போது, 'ஆல் பாஸ்' முறையை ரத்து செய்யலாம் என, குழு பரிந்துரைத்தது. இதையடுத்து, ஆட்சிக்கு வந்த, பா.ஜ., அரசு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய, தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவும் ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்கியது.

அதன்படி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, 2019 ஜனவரி, 3ல், பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, 2019 ஜனவரி, 10ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, 2019, பிப்ரவரி, 28ல், திருத்த சட்டம், மத்திய அரசிதழில் வெளியானது. திருத்த சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, எந்த தேர்வும் நடத்தாத மாநிலங்கள், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, குறைந்தபட்சம், பொதுவான ஆண்டு இறுதித் தேர்வு ஒன்றை நடத்தலாம்.

இது குறித்து, மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், முப்பருவத் தேர்வு முறையை அமலில் வைத்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என, 2019 செப்டம்பர், 13ல் அறிவித்தது. இந்த தேர்வுக்கு துவக்கம் முதலே எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து. தற்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது