கல்வித் துறை கமிஷனர் விளக்கம்; 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்

சென்னை: 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான, பொதுத் தேர்வு அடிப்படையில், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்த வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.


தேர்வு குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைய வேண்டாம்' என, பள்ளி கல்வித் துறை கமிஷனர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டதால், மூன்றாம் பருவத் தேர்வு நடக்குமா; ஏற்கனவே நடந்த இரண்டு பருவத் தேர்வுகளில் வழங்கப்பட்ட மதிப்பெண் நிலை என்ன என்பது குறித்து, சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. விளக்க அறிக்கைஅதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், பள்ளி கல்வித் துறை கமிஷனர் சிஜி தாமஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, 2012 - 13ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. வளரறிதல் மற்றும் தொகுத்தறிதல் என்ற, இரண்டு மதிப்பீடு பின்பற்றப்படுகிறது. வளரறிதலில் சிறு தேர்வு, 'புராஜக்ட்' மற்றும் செயல் வழி கற்றல் வழியாக, 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தொகுத்தறிதலில் தேர்வு நடத்தப்பட்டு, 60 மதிப்பெண் தரப்படுகிறது.

தற்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு, வளரறிதல் முறையில், பள்ளி ஆசிரியர்களால் வழங்கப்படும் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். மாணவர்களை மதிப்பீடு செய்வதில், சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறை தேவை உள்ளதால், தொகுத்தறிதல் முறை தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையால் வினாத்தாள் தயாரிக்கப்படும்.

இந்த வினாத்தாள்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக ரகசியமான முறையில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் விடைத்தாள்களை, வட்டார வள மைய அளவில், பிற பள்ளிகளுக்கு மாற்றி வழங்கி, திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்களின் கற்றல் திறனை ஒரே மாதிரியாக சோதித்து அறியவும், நியாயமான மதிப்பீடு செய்யவும், ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்கவும்,

இந்த தேர்வு ஏதுவாக அமையும். மேலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு, இறுதித் தேர்வு அடிப்படையில், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. குழப்பம் அதிகரிப்பு பள்ளி கல்வித் துறை கமிஷனரின் விளக்க அறிக்கையால், பொதுத் தேர்வு குறித்த குழப்பம் அதிகரித்துள்ளது.

அதாவது, தொடர் மதிப்பீடு முறை தொடர்கிறதா; இந்த கல்வி ஆண்டில் நடந்த, இரண்டு பருவத் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்பதை விளக்கவில்லை. மூன்றாம் பருவ பாடங்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடக்குமா; மூன்றாம் பருவத்தேர்வுடன், இறுதித் தேர்வு என்று, நான்காவது தேர்வு நடக்குமா, அதற்கான பாடப் பகுதிகள் என்ன என்ற விபரங்களை தெளிவுபடுத்தவில்லை. முந்தைய பருவத்துக்கான புத்தகங்கள், மாணவர்களிடம் இல்லை. அந்த புத்தகங்கள் மீண்டும் வழங்கப்படுமா என, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.