3,500 தற்காலிக ஆசிரியர் நியமனம்

சென்னை: அரசு தொடக்கப் பள்ளிகளில், 3,500 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளி களில், ஆங்கில வழி வகுப்புகள், எல்.கே.ஜி., மழலையர் வகுப்புகள் துவக்கம்; 'ஸ்மார்ட்' வகுப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வரிசையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 3,500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய ஆசிரியர்களை நியமிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.'தற்காலிக பணி என்றாலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் மட்டுமே, விண்ணப்பங்களை பெற வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.